அரசு நுகர்பொருள் வாணிப கிடங்கில் அதிகாரிகளின் முறைகேடு புகார் கன்னியாகுமரி:தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (Tamil Nadu Civil Supplies Corporation) அரிசி, கோதுமை, பருப்பு, மண்ணெண்ணெய், ரவா, சமையல் எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களை நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் மக்களிடையே பொது விநியோகம் செய்வதற்காக இந்த நிறுவனத்தை தமிழ்நாடு அரசு 1972-ஆம் ஆண்டில் நிறுவியது.
நெல் போன்ற உணவு தானியங்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய இந்த கழகம் செயல்படுகிறது. இது போல கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் பகுதியில் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசு மூலமாகவும் மாநில அரசு மூலமாகவும் அனுப்பப்பட்டு வரும் அரிசி பருப்பு போன்ற உணவு பொருட்கள் ரயில் மூலமாக நாகர்கோவில் ரயில் நிலையம் வந்து சேரும். அங்கிருந்து லாரிகள் மூலமாக ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் நுகர்வோர் வாணிப கழகங்களுக்கு எடுத்து வரப்படுகிறது.
லாரிகளில் கொண்டு வரப்படும் அரிசி, பருப்பு, சீனி, பாமாயில், கோதுமை போன்ற பொருட்களை பாரம் தூக்கும் வேலை ஆட்களால் குடோனில் இறக்கி வைத்து விட்டு அங்கு ஏற்கனவே இருப்பு இருக்கும் பொருட்களை ரேஷன் கடைகளுக்கு லாரியில் ஏற்றி விடுவார்கள். இவ்வாறு எடுத்து வரப்படும் மூட்டைகளுக்கு அரசு சார்பில் ஏற்றுவதற்கு ஒரு கூலி, இறக்குவதற்கு ஒரு கூலி என வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் இங்கு பாரம் ஏற்றி இறக்குபவர்கள் லாரிகளில் வரும் மூட்டைகளை கிடங்கில் இறக்குவதற்குப் பதிலாக அந்த மூட்டைகளை அப்படியே மற்றொரு லாரியில் ஏற்றி அதனை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி விடுகின்றனர். இதனால் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்ட அரிசி அப்படியே உள்ளதாகவும், இந்த வகையில் சுமார் 50 முதல் 60 டன் ரேஷன் அரிசிகள் கெட்டு போன நிலையில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் பாரம் ஏற்றி இறக்கும் வேலையாட்கள், லோடு கொண்டு வரும் லாரி ஒப்பந்தகாரரிடம் இருந்து ஒரு கூலி, லோடு ஏற்றி செல்லும் லாரி ஒப்பந்தகாரரிடம் இருந்து ஒரு கூலி என நான்கு கூலி பெற்று வருகின்றனர். இந்த தகவலை கிடங்கு ஊழியர்கள் சிலர் தங்களது நுகர்வோர் அமைப்பிற்கு தெரிவித்து உள்ளதாக நாகர்கோவிலை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜான் விக்டர் தாஸ் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணத்தில் செயல்பட்டு வரும் நுகர்ருள் வாணிப கழகத்திற்கு ரயில் மூலம் வரும் அரிசி மூடைகளை இறக்க அங்குள்ள சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு கூலி வழங்கப்படுகிறது.
இதேபோல கிடங்கியில் இருந்து மூடைகளை ஏற்றுவதற்கு, ஒரு கூலி வழங்கப்படுகிறது. ஒப்பந்ததாரரிடம் இருந்து ஒரு தொகை சம்பளமாக பெறப்படுகிறது. மேலும் அரசாங்கமும் மூட்டைகளை ஏற்றி இறக்க சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு என தனியாக சம்பளம் வழங்குகிறது.
இப்படி நான்கு வகையான சம்பளங்கள் பெற்று கொண்டு லாரிகளில் வரும் அரிசி மற்றும் உணவு பெருட்களை குடோனில் இறக்கி வைப்பதற்கு பதிலாக ஒரு லாரியில் வரும் மூடையை அப்படியே மற்றொரு லாரியில் வேலை பளுவின்றி எளிதாக ஏற்றி விட்டு தங்கள் பணி முடிந்தது என்று மற்ற வேலையை பார்க்க துவங்கி விடுகின்றனர்.
இப்படியே தொடர்ந்து, வரும் சரக்குகளையே ரேஷன் கடைகளுக்கு திருப்பி ஏற்றி விடுவதால் சுமார் 50 முதல் 60 டன் அரிசி வரை பல மாதங்களாக இருப்பு வைக்கப்பட்டு கெட்டு போன நிலையில் உள்ளது. இதனை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் மக்களின் வரி பணம் என்ற எண்ணத்தையே மறந்து, நடக்கும் தவறுகளை கண்டு கொள்ளாமல் தங்களது சுயநலத்திற்காக சிலருடன் கூட்டணி அமைத்து முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் குறிப்பாக ஒருவேளை உணவு இன்றி, லட்சக்கணக்கான மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதேபோன்று நெல் மற்றும் கோதுமை பருப்பு போன்றவற்றை பயிரிட்டு அதனை விளைய வைக்க விவசாயிகள் படும் துயரத்தையும் நாம் அறிவோம். பல லட்ச ரூபாய் செலவு செய்து விவசாயம் செய்யும் விவசாயிகள் அவர்களது நஷ்டத்தின் இடையே இது போன்ற உணவு தானியங்களை தயார் செய்து வருகின்றனர்.
நிலைமை இப்படி இருக்க அரசு இயந்திரம் சரியாக செயல்படாத காரணத்தால் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருள் வீணாக கெட்டுப் போகும் நிலையை கண்காணிக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேலைக்கு சம்பளம் என்ற நிலை மாறி, பல ஊதியங்களுக்காக ஒரு பணி என்று சுயலாபத்திற்காக பணி முறைகேடு செய்தவர்கள் மற்றும் அதை கண்காணிக்க தவறியவர்கள் மீது தமிழக அரசு ஒரு குழுவை அனுப்பி விரிவான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேக்கம் அடைந்த உணவு பொருட்களை அதற்குரிய மதிப்பீடு தயார் செய்து அதற்கு யார் காரணமோ அவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். லாரிகளில் இருந்து கொண்டுவரப்படும் உணவு மூடைகள், குடோனில் இறக்கப்படாமல் மற்றொரு லாரியில் ஏற்றப்படும் காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.
ஏற்கனவே மூடைகளை ஏற்றி இறக்கும் போது ஒரு மூடைக்கு இரண்டு கிலோ குறைவாக உள்ளது என ரேஷன் கடை ஊழியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே இந்த குறைபாட்டிற்கும் யார் காரணம் என்று விசாரணை நடத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: ஆம்பூர் அருகே அசால்டாக அரசுப் பேருந்தில் 40 கிலோ கஞ்சாவை கடத்திய வட மாநில இளைஞர் கைது!