கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசால் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக ரேஷன் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதனை சிலபேர் அவ்வப்போது அண்டை மாநிலமான கேரளாவில் அதிக லாபம் கிடைக்கும் என்பதற்காக கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இதனை தடுப்பதற்கு மாவட்டத்தில் தனிப்படை பிரிவுகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. எனினும் காவல் துறையினர் மற்றும் தனிப்படை பிரிவினரை ஏமாற்றி கடத்தல்காரர்கள் தொடர்ந்து ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருள்களை கடத்தல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நித்திரவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் இன்பராஜ் இருசக்கர வாகன ரோந்து சென்றபோது ஒரு மினி டெம்போ ஒன்று சந்தேகப்படும்படி வந்துள்ளது. எதிரே காவல் துறையினர் வருவதை கண்ட கடத்தல்காரர்கள் டெம்போவை அதிவேகமாக ஓட்டி சென்றுள்ளனர்.
இதை கண்டு சுதாரித்து கொண்ட காவலர் அந்த வாகனத்தை பின்தொடர்ந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்றுள்ளார். இதனையடுத்து கடத்தல்காரர் டெம்போவை சூரியகோடு பகுதியில் நிறுத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.
இதனை தொடர்ந்து காவலர் இன்பராஜ் டெம்போவில் கட்டப்பட்டிருந்த டார்பாவை திறந்து பார்த்த போது அதனுள் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய இரண்டு டன் மதிப்பிலான ரேஷன் அரிசி சாக்கு மூட்டைகளில் இருந்துள்ளது. மேலும் கடத்தல்காரர் இந்த ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து காவலர் இன்பராஜ் டெம்போவுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, நித்திரவிளை காவல் நிலையம் கொண்டு வந்து விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ராகுல்காந்திக்கு 'தமில்' வகுப்பெடுத்த நடிகை குஷ்பு - மதுரை பாஜக பிரச்சாரத்தில் ருசிகரம்!