கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியிலிருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் ஜனவரி 8ஆம் தேதி இரவு துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார். கொலை குற்றவாளிகள் ஜனவரி 14ஆம் தேதி கர்நாடகாவில் கைதுசெய்யப்பட்ட நிலையில், கர்நாடக காவல் துறை குற்றவாளிகள் இருவரையும் விசாரணை அலுவலர் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தலைமையிலான தனிப்படை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து நேற்று (ஜன.16) குமரி மாவட்டம் கொண்டுவரப்பட்ட அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோரிடம் தக்கலை காவல் நிலையத்தில் 15 மணி நேரத்திற்கு மேலாகக் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து நேற்றிரவு குழித்துறை நீதிபதி ஜெய்சங்கர் முன்பு குற்றவாளிகள் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அப்போது, இந்த மனுவை வருகின்ற 20ஆம் தேதி (திங்கள்கிழமை) விசாரிப்பதாகவும், அதுவரை கைதான இருவரையும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
அப்துல் சமீம், தவுபீக் ஆகிய இருவரும் நேற்று இரவே கமாண்டோ படை பாதுகாப்புடன் பாளையங்கோட்டை சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டு தனி தனி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், அப்துல் சமீம், தவுபீக் இருவருக்கும் ஏற்கனவே உதவி செய்தவர்கள், அவர்களைப் போன்று குமரி மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் செயல்படுவோரை கண்டுபிடித்து கைதுசெய்வதற்கும் காவல் துறை திட்டமிட்டுள்ளது.