தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் நோயாளிகள்; செவிலியர் பற்றாக்குறை - நடவடிக்கை எடுக்குமா அரசு? - Nurse Shortage in Kumari

தற்போது தென் மாவட்டங்களில் கரோனா பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில், மருத்துவர்கள், செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனைச் சரிசெய்ய பணியில்லாமல் வீட்டிலேயே முடங்கியிருக்கும் செவிலி மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்பதே மருத்துவத் துறையைச் சேர்ந்த அனைவரின் ஒருமித்த குரலாக உள்ளது.

shortage-of-nurses-in-districts
shortage-of-nurses-in-districts

By

Published : Jul 23, 2020, 2:23 PM IST

Updated : Jul 24, 2020, 1:21 PM IST

சில நாள்களுக்கு முன் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பெரும்பாலானவர்களின் டைம்லைனில் ஒரு மீம் உலாவந்தது. அது, உலக சூப்பர் ஹீரோக்களான சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், பேட் மேன், வொண்டர் வுமன், ஹல்க் என அனைவரும் சேர்ந்து மருத்துவர்கள், செவியர் ஆகியோரைக் கை தட்டி வரவேற்பது போல் உருவாக்கப்பட்டிருந்தது.

கரோனா வைரசை எதிர்கொள்ள மக்களுக்கு கிடைத்த ஒரே ஆயுதம் மருத்துவர்களும், செவிலியரும்தான். எனவே அவர்களை 'கரோனா வாரியர்ஸ்' என்று செல்லப் பெயர் வைத்து அனைத்துத் தரப்பினரும் பாராட்டினர். கரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் முதன்முதலாகப் பதிவான நாள் தொடங்கி இன்று வரை கரோனா வாரியர்ஸின் பணியை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது.

கரோனாவின் தாக்கம் சென்னையில் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே சென்றதால், மற்ற மாவட்டங்களில் பணிபுரிந்துவந்த மருத்துவர்களும், செவிலியரும் சென்னை மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டனர். அதேபோல், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் புதிதாக இரண்டாயிரம் செவிலியரைப் புதிதாக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

ஆனால், தற்போது சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவரும் சூழலில், மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க மற்ற மாவட்ட நிர்வாகங்கள் திணறிவருகின்றன.

சமீபத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனி வார்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். தங்களுக்கு சரியான உணவு வழங்குவதில்லை, சிகிச்சையளிக்க மருத்துவர்கள் இல்லை, முறையாகக் கவனித்துக்கொள்ள செவிலியர் இல்லை என்று கூறி கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வார்டில் இருந்துகொண்டே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பைக் கிளப்பியது. இதுவரை கன்னியாகுமரியில் 2 ஆயிரத்து 721 பேர் கரோனா வைரசால்பாதிக்கப்பட்டுள்ளனர்; 24 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்து 260 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆயிரத்து 400 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது நாள்தோறும் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு தொடர்ந்து மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கு மருத்துவர்கள், செவிலியர் ஆகியோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், மறுபுறம் குமரியில்தான் செவிலியர் படிப்பை முடித்தவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

செவிலியர் பற்றாக்குறை - நடவடிக்கை எடுக்குமா அரசு?

அரசு மற்றும் தனியார் என மொத்தமாக குமரியில் ஏழு செவிலியர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. இங்கு படிப்பை முடித்து வெளியே வரும் செவிலியர் ஏராளமானோர் பணி கிடைக்காமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் கரோனா தீவிரமடைந்து வரும் இந்தச் சூழலில், இதுபோன்று பணி நியமனம் கிடைக்காமல் தவித்துவரும் செவிலியரை அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இதுகுறித்து மருத்துவர் செந்தில்வேல் கூறுகையில், ''கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் மருத்துவர்கள், செவிலியர் ஆகியோரின் பணி மிகவும் முக்கியமானது. இதில் செவிலியரின் பங்கு அதிமுக்கியமானது. ஏனென்றால், மருத்துவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்துவிட்டு எழுதிக் கொடுக்கும் மருந்தைக் கொடுப்பது, நோயாளிகளைக் கவனித்துக் கொள்வது என இந்த நேரத்தில் அவர்களின் பணி இன்றியமையாத ஒன்று. குமரி மாவட்டத்தில் ஏராளமான செவிலியர் படிப்பு படித்துமுடித்தவர்களுக்கு பணி நியமனம் கிடைக்காமல் இருக்கிறது. அவர்களுக்கு அரசு உடனடியாகப் பணி நியமன ஆணை வழங்கினால், கரோனாவை எளிதாகக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்'' என்றார்.

தொடர்ந்து செவிலியர் சுதா பேசுகையில், ''செவிலியரை அதிகம் பணியில் அமர்த்துவதன் மூலம் எந்த நோயாளி எதற்காக மருத்துவமனை வருகிறார் என்பதைக் கண்காணிக்க முடியும். கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு ஒரு செவிலியர் என்ற வீதத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

இதன் மூலம் காரோனா நோயாளிக்கு வழங்க வேண்டிய மருந்துகளைச் சரியான நேரத்தில் தொடர்ந்து வழங்கி, அவரை வெகுவிரைவில் குணப்படுத்திக் காப்பாற்றலாம். குமரி மாவட்டத்தில் ஏராளமானோர் செவிலியர் படித்துவிட்டு வேலையில்லாமல் வீடுகளில் உள்ளனர். அவர்களுக்கு வேலை வழங்கினால், கரோனாவையும் எளிதில் கட்டுப்படுத்த முடியும். அவர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற முடியும்'' என்றார்.

இந்தியாவிலேயே கரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், ஓரளவேனும் மருத்துக் கட்டமைப்பு கொண்ட மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டில், படித்துமுடித்த செவிலி மாணவிகள் வீட்டில் இருப்பதும், நோயாளிகளைக் கவனித்துக்கொள்ள செவிலியர் பற்றாக்குறை இருப்பதும் வேதனைக்குரிய ஒன்று. ஆகவே, துரிதமாகச் செயல்பட்டு, செவிலி மாணவிகளுக்கு பணி வழங்கி நோயாளிகளையும் அம்மாணவிகளின் வாழ்வாதாரத்தையும் காப்பதுமே அரசின் தலையாயக் கடமை!

இதையும் படிங்க:டாக்டர்கள் இல்லை... முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் - மீளுமா விருதுநகர்?

Last Updated : Jul 24, 2020, 1:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details