கன்னியாகுமரியில்உள்ள மீனவர்கள் வளைகுடா நாடுகளில் ஏராளமானோர் தங்கி அங்குள்ள அரேபிய முதலாளியிடம் மீன்பிடித்தொழில் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆழ்கடலில் மீன் பிடிக்கச்செல்லும்போது புயல், கடல் சீற்றம், சூறைக்காற்று போன்ற இயற்கைப்பேரிடரால் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதேபோன்று கடல் எல்லையைத்தாண்டியதாகக்கூறி, அவ்வப்போது மீனவர்கள் கைது செய்யப்படுவது ஒரு தொடர்கதையாக இருந்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை, இணையம்புத்தன்துறை, கோடி முனை மூன்று கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த சிபு மரிய விக்டர், ஜோஸ், மெஸ்பின், அருண் நிதின், கிரண், பிரவின் ஆகிய ஏழு மீனவர்கள் கடந்த 12ஆம் தேதி ஈரான் நாட்டிலிருந்து விசைப்படகு மூலம் ஆழ்கடலில் மீன் பிடிக்கச்சென்றபோது கடல் எல்லை தாண்டியதாகக்கூறி, கடந்த 14ஆம் தேதி கத்தார் நாட்டு கடலோர காவல் படையினர் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.