கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த பத்து நாள்களாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவருகிறது.
இதில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் சில அரசு ஊழியர்களையும் கரோனா தொற்று பாதித்துள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் பணிபுரியும் அலுவலகங்கள் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூன்று நாள்கள் மூடப்பட்டு பின்னர் திறக்கப்படுவது மாவட்டத்தில் நடைமுறையில் இருக்கிறது.
ஆனால் இதற்கு முரணாக தோவாளை தாலுகா அலுவலகத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் சுயநலத்துடன் பொதுமக்கள் நலன் கருதாமல் தாலுகா அலுவலகத்தில் அமைந்துள்ள வளாகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் பொதுமக்கள் யாரும் உள்ளே நுழையாத வண்ணம் வாசலில் தடுப்பு கட்டைகள் வைத்து நிரந்தரமாக அடைத்து உள்ளனர் தோவாளை தாலுகா அலுவலகத்தை சேர்ந்த உழியர்கள் .
மேலும் பொதுமக்களிடமிருந்து மனுக்களை நேரடியாக வாங்குவதை தவிர்க்கும் பொருட்டு வாசலின் முன்பு பெட்டிகளை வைத்து அதில் பொதுமக்கள் புகார்களை போடுமாறு அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
இந்த செயலால் பொதுமக்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர். தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளையும் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் அரசு அலுவலர்களிடம் நேரடியாக சென்று மனுக்களை கொடுத்தாலே நிறைவடையாத சூழ்நிலையில் தோவாளை தாலுகா அலுவலக ஊழியர்களின் இந்த சுயநலம் சார்ந்த செயல் தங்களை மிகவும் பாதித்துள்ளதாக தோவாளை தாலுகா பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆகவே பொதுமக்கள் நலன் கருதி தோவாளை தாலுகா அலுவல வளாகத்தில் செயல்படும் அனைத்து பிரிவுகளிலும் வைக்கப்பட்டுள்ள நிரந்தர தடுப்பு கட்டையை நீக்குவதோடு பொதுமக்களை தாலுகா அலுவலகத்திற்குள் அனுமதிக்க வேண்டும். மீண்டும் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க:நிலத்திற்காக மாமனாரை கொலை செய்த மருமகள் கைது!