கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் அருகே அழிக்கால் மீனவ கிராமத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்களில் அவ்வப்போது கடல் சீற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை கடல்நீர் அடித்துச் சொல்வதோடு, வீட்டிற்குள்ளும் பலமுறை கடல் நீர் புகுந்துள்ளது. இக்காலங்களில் அப்பகுதியினர் உறவினர்கள் வீடுகளில் தங்கி விட்டு, கடல் இயல்பு நிலைக்கு வரும்போது தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
மீனவ கிராமத்தில் புகுந்த கடல் நீர் - தடுப்புச் சுவர் விழுந்து இளைஞர் உயிரிழப்பு
கன்னியாகுமரி: அழிக்கால் மீனவ கிராமத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் வீடுகளுக்குள் புகுந்த கடல் நீரை தடுப்பதற்காக மணல் மூட்டை அடுக்கி கொண்டிருந்த இளைஞர் மீது மதில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார்.
இந்நிலையில், இன்று (ஆகஸ்டு 9) திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்தது. அப்பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞர் அஸ்வின் தனது வீட்டு முன்பாக கடல் மண்ணை மூட்டைகளில் கட்டி வைத்து தடுப்பு ஏற்படுத்தி கடல் நீரை தடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக வேகமாக வந்த கடல் அலையால் மதில்சுவர் அஸ்வின் மீது இடிந்து விழுந்தது. இதில் நினைவிழந்து கிடந்த அஸ்வினை அப்பகுதியினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்ததாக கூறினர்.
பின்னர் சம்பவ இடத்தை பார்வையிட நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் வந்தபோது அப்பகுதி பெண்கள் அவரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், நீண்ட காலமாக தங்கள் பகுதிக்கு கடல் அரிப்பு தடுப்பு சுவர், தூண்டில் வளைவு அமைத்து தருவதாக அரசு கூறினாலும் இதுவரை அமையவில்லை. எனவே தங்கள் பிரச்னைக்கு முடிவு தெரியும்வரை கோட்டாட்சியரை விட மாட்டோம் என கூறி அவரை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.