இவ்வுலகத்தில் அழிந்துபோன பண்டைய நாகரிகங்களை, வரலாற்றை, பண்பாட்டுக் கூறுகளைக் கண்டறிய பல சாதனங்கள் இருப்பினும் கடல் கொண்ட நாகரிகமாகக் கருதப்படும் தமிழர்களின் நாகரிக வளர்ச்சியைக் கற்காலம் முதல் இன்று வரை காட்டுவது கல் சிற்பங்களே. தமிழர்களின் கலைத்திறனில் முக்கிய அங்கமாக விளங்குவது கல் சிற்பக்கலை தான்.
அத்தகைய சிற்பக்கலைக்கு உலகளவில் பெயர்போனது குமரி மாவட்டத்தின் மயிலாடி ஊர். இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரியம் மிக்க பொருள்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் புவிசார் குறியீடான மயிலாடி கல் சிற்பக்கலை முதன்மை இடம் வகிக்கிறது. தரத்தையும், நன்மதிப்பையும் பறைசாற்றும் சின்னமாக இந்தியாவுக்கே பெருமையும் வருவாயையும் சேர்த்து தந்த மயிலாடி கல் சிற்பத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தற்போது ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலால், இந்தச் சிற்பத் தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளது. ஊரடங்கு உத்தரவால், கல் சிற்பத் தொழில் எதுவும் நடைபெறாமல் பொலிவிழந்து போயுள்ளது. சிற்பத் தொழில் தவிர வேறு எந்தத் தொழிலும் தெரியாத இப்பகுதி சிற்பத் தொழிலாளர்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்க கூட வழியின்றி திண்டாடி வருகின்றனர். பலர் வேலைவாய்ப்பை இழந்து தொழில் இல்லாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கல் சிற்பத் தொழிலாளர் நலச் சங்கத் தலைவர் மாணிக்கம் கூறுகையில், “மயிலாடியில் தயாரிக்கப்படும் கல் சிற்பங்கள் உலகப் பிரபலமானவை. இங்கிருந்து பல வெளிநாடுகளுக்கு கல் சிற்பங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.