கன்னியாகுமரி:சாலைப்பணிகள் தொடங்கி ஆறு மாதங்களாகியும் சாலையை சீரமைக்கப்படாததைக் கண்டித்து மேல்மிடாலம் ஜங்சனில் மாணவர்கள், மீனவர்கள், ஊர் மக்கள் அரசு பேருந்துகளை சிறை பிடித்து சாலைமறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேல்மிடாலத்தில் உதயமார்த்தாண்டம் ஜங்சனில் இருந்து கைதவிளாகம், மேல்மிடாலம் வழியாக கடலோரச்சாலை செல்கிறது. இச்சாலையை குறும்பனை, மிடாலம், மேல்மிடாலம், ஹெலன் நகர், இனயம், புத்தன்துறை, ராமன்துறை உள்ளிட்ட மீனவர் கிராமங்களை சார்ந்த மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இச்சாலை மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் குண்டும் குழியுமாக காணப்பட்ட நிலையில், இதனை சீரமைக்க வேண்டுமென இப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி சாலை மறியல் இதன் பயனாக தமிழக அரசு ரூ.1.30 லட்சம் ஒதுக்கீட்டில் இச்சாலையை சீரமைக்கும் பணிகளை சில மாதங்களுக்கு முன், கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார். பணி துவங்கிய சில நாட்களில் பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் அவ்வழியாக செல்ல இயலாத நிலை ஏற்படவே தவிப்புக்குள்ளாகிய அப்பகுதி பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள், இன்று (ஆக.21) அவ்வழியாக சென்ற 4 அரசு பேருந்துகளை மறித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டடனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிள்ளியூர் தாசில்தார் ராஜேஷ், கருங்கல் காவல்துறை ஆய்வாளர் ஜெயச்சந்திரன், உதவி ஆய்வாளர் மகேஷ் சம்பவ இடத்தில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ஹெலன் ஜெனட், வரும் செப்டம்பர் இறுதிக்குள் சாலைப்பணி முடிக்கப்படும் என எழுத்துபூர்வமாக உறுதி அளித்தார். இதையடுத்து போராட்ட கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 2ஆவது சீசனுக்குத் தயாராகும் கொடைக்கானல்... பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பூக்கள்