கன்னியாகுமரி: அருமநல்லூர் அருகே ஞாலம் பகுதியில் வசிப்பவர்கள் மனோஜ் பிரபாகர், மற்றும் அவரது உறவினர் ஜெகன் பிரேம் ஆகியோரிடம் குமரி மாவட்டத்தை சேர்ந்த வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் ஏஜெண்டுகளான அனுஷியா மற்றும் அவரது கணவர் சுபாஷ் ஆகியோர் தொடர்பு கொண்டனர்.
குவைத்தில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ. 2 லட்சம் வீதம் இருவரிடம் நான்கு லட்சம் பெற்று குவைத்திற்கு மனோஜ் பிரபாகர் மற்றும் ஜெகன் பிரேம் ஆகிய இரு வாலிபர்களை அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அங்கு சென்ற இவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு இவர்கள் எதிர்பார்த்து சென்ற வேலையும் இல்லை மற்றும் இவர்களின் விசா காலாவதி ஆனதும் தெரியவந்தது.
அதனை தொடர்ந்து இவர்கள் போலீசுக்கு பயந்து வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். இதை அறிந்த இவர்களின் உறவினர்கள் பணம் பெற்று ஏமாற்றிய ஏஜெண்டுகள் மீது எஸ்பி அலுவலகத்திலும், பூதப்பாண்டி போலீசிலும் புகார் செய்தனர்.