கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் பேரூராட்சி அலுவலகம் பகுதியில் பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதனால், பேருந்து நிலையம் எப்போதும் மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக இருக்கும். இந்நிலையில் பேருந்து நிலையத்தில் கடந்த இரண்டு நாட்களாக டிப்டாப்பாக உடையணிந்த ஒருவர் மது போதையில் படுத்திருந்தார்.
மது போதை தீர்ந்ததும் மீண்டும் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்துவிட்டு முழு போதையில் வந்து பேருந்து நிலையத்தில் படுப்பதை இரண்டு நாட்களாக வாடிக்கையாக வைத்திருந்தார். இதையறிந்த அஞ்சுகிராமம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் முத்துராஜ், அங்கு சென்று டிப்டாப் ஆசாமியிடம் பேச்சுக் கொடுத்தார். அந்த நபர் வேலூர் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்தவர் என்பதும், மின்சார வாரியத்தில் பணியாற்றி வரும் அரசு ஊழியர் தங்கம் என்றும் தெரியவந்தது. இவரது மனைவி நெல்லை மாவட்டம், பழவூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அவரது மனைவி தற்காலிகமாக பழவூரில் தங்கி இருந்துள்ளார். அவரை பார்ப்பதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பழவூருக்கு வந்துள்ளார்.