குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர் வழிப்பறி, அரிவாளால் வெட்டி பணம் பறித்தல், கொலை, கொலை முயற்சி போன்ற சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. இதைக் கட்டுப்படுத்த ரோந்துப் பணிகளை அதிகப்படுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இரணியல் காவல் துறையினர் திங்கள்நகர் அடுத்த நெய்யூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கேரள பதிவு எண் கொண்ட காரை அவர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஓட்டுநரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார்.
இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் காரை சோதனையிட்டனர். அப்போது, காரில் சந்தனக் கட்டைகளும், அரிவாள், வெட்டு கத்தி, மிஷின் வாள் போன்ற ஆயுதங்களும் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைதுசெய்த காவல் துறையினர் வாகனத்தைப் பறிமுதல்செய்தனர்.