கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இங்கு ஆண்டுதோறும் ஆவணி, வைகாசி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு இன்று அதிகாலை முத்திரி பதமிடுதலைத் தொடர்ந்து நடை திறந்து திருவிளக்கேற்றுதல், கொடி பட்டம் தயாரித்தல், கொடியேற்றம் போன்றவை நடைபெற்றது. கொடியை குரு பால ஜனாதிபதி ஏற்றிவைத்தார். கொடியேற்றத்தையொட்டி சாமிதோப்பில் சென்னை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அய்யா வைகுண்டசாமி ஆவணி திருவிழா பின்னர் மதியம் வடக்கு வாசலில் அன்னதானம், இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் போன்றவை நடைபெறும். தொடர்ந்து நாளை முதல் வருகின்ற 29ஆம் தேதிவரை பல்வேறு வாகனங்களில் அய்யா தெருவீதி வலம்வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
மேலும், வருகின்ற 30ஆம் தேதி எட்டாம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், 31ஆம் தேதி இரவு அய்யா அனுமன் வாகனத்திலும், அடுத்த மாதம் (செப்டம்பர்) 1ஆம் தேதி இந்திர வாகனத்திலும் பவனிவருதலும் நடைபெறும். விழாவின் இறுதி நாளான 2ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது.