கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள முடித்திருத்தும் நிலையங்களை இன்றுமுதல் திறக்கலாம் எனவும், விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
- பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் முடித்திருத்தகங்கள் செயல்பட அனுமதி இல்லை.
- வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு முடித்திருத்த அனுமதி இல்லை. அவ்வாறு அவர்கள் முடித்திருத்த வரும்பட்சத்தில், இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.
- முடித்திருத்துபவர்கள் பாதுகாப்புக் கவசம் அணிய வேண்டும். ஒரு வாடிக்கையாளருக்கு முகச்சவரம், முடித்திருத்தம் செய்துமுடித்ததும் கிருமிநாசினி கொண்டு சுத்தம்செய்ய வேண்டும். கண்டிப்பாகக் கையுறை அணிய வேண்டும்.
- முடித்திருத்த வரும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் முதலிய விவரங்களைப் பதிவேட்டில் பதிவுசெய்ய வேண்டும்.
- ஒரு நேரத்தில் ஒரு வாடிக்கையாளர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும்.
- முடித்திருத்தும் பணியாளர்கள் அடிக்கடி தங்களது மூக்கு, வாய், கண்களைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.
- நாற்காலிகள், மேசைகள் கதவின் கைப்பிடி, கண்ணாடிகள், தண்ணீர்க்குழாய்கள் ஆகியவற்றை கிருமிநாசினி கொண்டு, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஐந்து முறையாவது சுத்தம்செய்ய வேண்டும்.