கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி சந்திப்பில் தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளது. இங்கு பங்கு பேரவை துணைத் தலைவராக ராஜ்குமார் (37) என்பவர் இருந்து வருகிறார்.
ஆலயத்தின் மேல் பகுதியில் பங்குத்தந்தை இல்லம் இருக்கிறது. இந்நிலையில், நேற்று (ஜன. 03) இரவு 10 மணி அளவில் பங்கு தந்தை ஆலயத்தைப் பூட்டி விட்டு அவரது இல்லத்திற்குச் சென்று விட்டார்.
கொள்ளை
இன்று அதிகாலை 5 மணிக்கு மணி அடிப்பதற்காக கோயில் உபதேசியார் வந்து பார்க்கும்போது, கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு, அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது இரண்டு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் தங்க நியாய தராசு திருடப்பட்டது தெரியவந்தது.
காவல் துறைக்கு தகவல்
இதுகுறித்து பங்கு பேரவை துணைத் தலைவர் ராஜ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த அவர் வந்த இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதனடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், அஞ்சுகிராமம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, கோயில் உண்டியலிருந்து சுமார் 25 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டு இருக்கலாம் எனக் கோயில் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
சிசிடிவி காட்சிகள்
இது குறித்து அஞ்சுகிராமம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், அழகப்பபுரம் பகுதியில் கணவனில்லாத பெண்ணின் வீட்டில் திருட்டு, நிலப்பாறை பகுதியில் கேபிள் திருட்டு, தற்போது மயிலாடி சந்திப்பு பகுதியில் நடைபெற்ற திருட்டுகளால் அப்பகுதிமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:ரூ.5000 கோடி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.45 கோடி அபேஸ் - இருவர் கைது!