கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தேரூர், அஞ்சுகிராமம், தாழாக்குடி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் ஐயாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி அறுவடை நடந்து முடிந்துள்ளது. கடந்த காலத்தில் இவ்வாறு அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாக கட்டி நெல் கொள்முதல் செய்யப்படும் இடங்களுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம்.
அதைத் தொடர்ந்து, நெல் மூட்டைகள் அரசி அரவை ஆலைகளுக்கு கொண்டு சென்று அரவை செய்து அரிசியாக்கப்பட்டு சந்தைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் காரணத்தினால் கூலி ஆள்கள் வெளியே வர அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், அரிசி அரவை ஆலைகளில் ஈரமான நெல்லை உலர்த்துவது, நெல் அரவை இயந்திரங்களை இயக்குவது, அரிசியை மூட்டைகளாக கட்டுவது, தவுடுகளை பிரிப்பது உள்ளிட்ட வேலைகளுக்கு கடும் ஆட்கள் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது.