கன்னியாகுமரி:நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் மாதந்தோறும் மீனவர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த மாதத்திற்கான கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு மீனவ அமைப்பு பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்த திட்டங்கள், மீனவர்களுக்கு அரசு செய்து தர வேண்டிய கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர், தோவாளை ஒன்றியத்திற்கு உட்பட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவுச் சங்கங்களில் தேர்தல் நடைபெற்றபோது, அதற்கான வாக்காளர் பட்டியல் மீன்வளத்துறை அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டு இருந்தது. கடத்த 2018ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தாமல் தேர்தல் நடத்தியதாக மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.
பல்வேறு மீனவ சங்கங்களின் புகாரின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் விசாரணை நடத்திய பின்னர், அந்த தேர்தலை ரத்து செய்தது முதல் இன்று வரை அந்த நாட்களில் கொடுக்கப்பட்ட குளறுபடிகள் சரி செய்யப்படவில்லை என கூட்டத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக, மீனவ கூட்டுறவு சங்கங்களுடைய உறுப்பினர்கள் இதில் வாக்காளர்களாக இருந்து வருகின்றனர். அந்த வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் கூட பல்வேறு குளறுபடிகளை அதிகாரிகள் ஒரு சிலருக்கு சாதகமாக ஏற்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு கிராமங்களிலும் இறந்தவர்கள் உயிருடன் இருப்பதாகவும், உயிருடன் இருப்பவர்கள் இறந்ததாக பட்டியல் தயாரித்து உள்ளனர். எனவே, வரும் கூட்டுறவு சங்கத் தேர்தலில் இந்த குறைகளை களைய வேண்டும் எனவும், முறையான ஆவணங்களைக் கொண்டு வரும் மீனவர்களை சங்கங்களில் இணைக்க வேண்டும் என மீனவ சங்கப் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.