கன்னியாகுமரி: போலி அனுமதிச் சீட்டு அச்சடித்து 3 ஆயிரம் ரேஷன் அரிசி கடத்த முயன்ற ஓட்டுநர் உதவியாளரை கைது செய்து ஆரல்வாய்மொழி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வெளி மாநிலங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும், குமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு உரிய ஆவணங்கள் முழுமையாக பரிசோதனை செய்த பின்னரே மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் இன்றும் (ஜூன் 7) ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த சுமை ஏற்றும் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, 60 மூட்டைகளில் 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருப்பதை கண்டு பிடித்தனர்.
இந்த அரிசியானது நெல்லை மாவட்டத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கொண்டு செல்வதாகவும், அதற்கான அனுமதிச் சீட்டு தங்களிடம் இருக்கிறது எனவும் ஓட்டுநர், காவலர்களிடம் தெரிவித்தார். அந்த அனுமதிச்சீட்டை ஆராய்ந்து பார்த்ததில் அவை போலி எனத் தெரியவந்தது.
இதனால் வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தி வந்த ஓட்டுநரான ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், வாகனத்தின் உதவியாளர் கில்பர்ட் ஆகியோரை கைது செய்த ஆரல்வாய்மொழி காவல்துறையினர் 3 ஆயிரம் கிலோ அரிசியையும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.