தமிழ்நாட்டின் தென் எல்லை மாவட்டமான குமரிக்கு மிக அருகில் கேரள மாநிலம் அமைந்துள்ளது. குமரியில் விளையும் காய்கறிகள் பூக்கள் என பல்வேறு பொருட்கள் கேரள மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அதேநேரத்தில் தமிழ்நாட்டில் இலவசமாக கொடுக்கப்படும் ரேஷன் அரிசி மறைமுகமாக கேரள மாநிலத்திற்கு கடத்தப்பட்டு வருகிறது. இந்த அரிசிக்கு கேரளத்தில் நல்ல விலை கிடைப்பதால், ரேஷன் அரிசி கடத்தல் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அரசு பேருந்துகள், தனியார் கார்கள், வேன்கள் போன்றவற்றில் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெற்று வந்தது. இதனை தடுப்பதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இது தவிர குமரி-கேரள எல்லையோர காவல்துறையினரும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர். மேலும் குமரியில் இருந்து பொருட்கள் கேரள மாநிலத்திற்கு கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக 36 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இதனால் ரேஷன் அரிசி கடத்தலை செய்வதற்கு கடத்தல்காரர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.
மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி ரயில் மூலம் கடத்தல்! இதைத் தொடர்ந்து தற்போது கடத்தல்காரர்கள் குமரியில் இருந்து கேரளா செல்லும் ரயில்களில் ரேஷன் அரிசியை கடத்த தொடங்கியுள்ளனர். சிறு பைகளில் ரேஷன் அரிசியை அடைத்து ரயிலின் இருக்கையின் கீழ் ஆங்காங்கே வைத்து விடுகின்றனர். பின்னர் கேரள எல்லைப் பகுதிக்குள் ரயில் சென்றதும் அரிசியை ரயிலிலிருந்து இறங்கி கடத்திச் செல்கின்றனர். காவல்துறையினரும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். ஒவ்வொரு முறை அரிசி கடத்தலைத் தடுக்க காவல்துறையினர் முயற்சி எடுக்கும் போதும் புதுவிதமான முறைகளைப் பயன்படுத்தி கடத்தல்காரர்கள் ரேஷன் அரிசியை தொடர்ந்து கேரளத்திற்கு கடத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.