குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்போது முதல் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சிஏஏக்கு ஆதரவாக பேரணி நடத்தவுள்ளதாக குமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் தெரிவித்துள்ளார்.
சிஏஏக்கு ஆதரவாக விளக்கமளிக்கும் குமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் இதுகுறித்து, நாகர்கோவிலில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் குமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்திவருகின்றன. அதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக இஸ்லாமிய பெயர் கொண்ட அமைப்புகளும் மாவட்டத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் போராடிவருகின்றனர்.
இதையடுத்து, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணிகளில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் மற்ற சட்ட ஒழுங்கு பாதுகாப்பு பணிகளில் காவலர்கள் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தப் போராட்டங்களால் பல்வேறு வகைகளில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இதுவரை 24 பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
குடியுரிமை சட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுகிறது. அந்த வகையில், இரண்டு லட்சம் துண்டு பிரசுரங்கள் மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, நாகர்கோவிலில் வரும் மார்ச் 1ஆம் தேதி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கணோர் பங்கேற்கும் மிகப்பெரிய பேரணி நடத்தப்படும். பார்வதிபுரத்திலிருந்து நாகர்கோவில்வரை நடைபெறும் இந்த பேரணியில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் கலந்துகொண்டு பொதுமக்களிடையே உரையாற்றுவார்” என்றார்.
இதையும் படிங்க: விருது பெற்ற நாவலாசிரியருக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்!