கன்னியாகுமரியில் கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது கன்னியாகுமரி:தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள பல இடங்களில் பரவலாகவும், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இதையடுத்து மேற்குதொடர்ச்சிமலையைக் கொண்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரமாக இடைவிடாது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்து.
அதாவது நாகர்கோவில், பூதப்பாண்டி, கீரிப்பாறை, தக்கலை, குளச்சல் மற்றும் மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேற்குதொடர்ச்சிமலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேலும், குமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக குருந்தண்கோடு பகுதியில் 134 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதே போன்று, நாகர்கோவிலில் 97 மில்லி மீட்டர் மழையும், கொட்டாரத்தில் 82 மில்லி மீட்டர் மழையும், அடையாமடையில் 75 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட இரு அணைகளுக்கும் விநாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேற்குதொடர்ச்சிமலையோரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தின் முக்கிய ஆறுகளில் ஒன்றான கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாத்தலமான திற்பரப்பு அருவியின் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருதி, பேரூராட்சி நிர்வாகம் அதிக அளவில் தண்ணீர் வரும் மெயின் அருவி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து, கயிறுகளை கட்டி தடை ஏற்படுத்தி உள்ளது. எனினும், அருவியின் ஒரு சிறிய பகுதியில் குளிப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், தொடர்ந்து கனமழை அதிகரித்தால் அருவி பகுதி முழுவதுமாக தடை செய்ய வாய்ப்புள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் தாழக்குடியில் உள்ள மீனமங்கலம் காலணியில் ஓட்டு வீடு இடிந்து விழுந்து 60 வயதான முதியவர் வேலப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதை போன்று மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. அவற்றை தீயணைப்புப் படையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கனமழையை எதிர்கொள்ளும் விதமாக தீயணைப்புப் படையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள மீட்புக் கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.
கடல் பகுதியைப் பொறுத்தவரை ஆழ்கடல் பகுதிகளில் வீசி வரும் சூறைக்காற்று மற்றும் மழைப்பொழிவு காரணமாக குளச்சல், முட்டம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. அரபிக்கடல் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக சின்ன முட்டம், குளச்சல், முட்டம் உட்பட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாட்டுப் படகுகள் மற்றும் விசைப்படகுகள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு அதிகபட்சம் 65 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்ற வானிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (அக்.4) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலம் குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!