கன்னியாகுமரி மாவட்டத்தில், புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், நேற்று(டிச.2) முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 பேர் கொண்ட இரண்டு பேரிடர் மீட்பு குழுவினர் வந்தடைந்தனர்.
அவர்கள் கன்னியாகுமரி, குளச்சல் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் ஆய்வு நடத்தினர். இந்நிலையில், மேலும் ஒரு பேரிடர் மீட்பு குழுவினர் இன்று(டிச.3) குமரி வந்தனர். அதே போல், மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு புயல் குறித்து ஒலிபெருக்கி மூலம் புயல் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன.
மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் தங்கி இருக்கும் நரிக்குறவர்களின் பட்டியல் எடுக்கப்பட்டு, அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல், சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நேற்று(டிச.2) மாலை முதல் சுற்றுலா வந்த பயணிகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.