கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். இவர் மதிமுக, அதிமுக, அமமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்துவிட்டு தற்போது இலக்கியப் பேச்சாளராக வலம்வந்து-கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், இன்று காலை கன்னியாகுமரியில் உள்ள அவரது இல்லத்தில் புதுச்சேரி தவளைகுப்பம் உதவி ஆய்வாளர் இளங்கோ தலைமையில் காவலர்கள் அவரைக் கைதுசெய்ய முயன்றனர்.
ஆனால், நாஞ்சில் சம்பத் காவல் துறையினருடன் செல்ல மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் தனது வழக்குரைஞரிடம் சட்ட ஆலோசனைகள் கேட்ட பிறகுதான், காவல் துறையினருடன் செல்வது குறித்து முடிவெடுக்க முடியும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை அறிந்த அவரது ஆதரவாளர்கள் நாஞ்சிலின் இல்லத்தில் குவியத் தொடங்கினர்.
இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது (2019 மார்ச்27ஆம் தேதி) புதுச்சேரியில் வைத்தியலிங்கத்தை ஆதரித்து பரப்புரைசெய்தார். அப்போது, அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.