கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுக்காவில் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டது மாங்கோடு, புலியூர்சாலை, மஞ்சாலுமூடு ஊராட்சி பகுதிகள். நூற்றுகணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள், குடியிருப்புகள் நிறைந்த அம்பலக்காலை பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த கிளாஸ்டின் ஜெபா என்பவர் பிளாஸ்டிக் தொழிற்சாலை தொடங்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, இதற்கான கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. இருப்பினும், அம்பலக்காலை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவிலை. தற்போது இந்த தொழிற்சாலையின் கட்டுமான பணிகள் நிறைவடைந்து, பிளாஸ்டிக் தொழிற்சாலை இயங்குவதற்கான ஆலை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், அனைத்துக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் திரண்டு கருப்புக் கொடி ஏந்தி ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தினர். அப்போது, இந்த ஆலை செயல்பட்டால் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள், நிலத்தடி நீர், குடிநீர், காற்று மாசு ஏற்பட்டு மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என குறிப்பிட்டனர்.
பிளாஸ்டிக் ஆலையை எதிர்த்து போராட்டம் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை துணை காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டம் கைவிடாத காரணத்தால் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இதையும் படிங்க:நாடகக் கலைஞர்களுக்காக அரசுப் பேருந்தில் சலுகை - தமிழ்நாடு அரசு