கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட்டம் கூடாமல் அனைவரும் தனிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதனை தடுக்கும் வகையில், ஏற்கனவே விதிக்கபட்ட நடைமுறை சட்டங்களை மேலும் தீவிரப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சித்துவருகின்றன.
ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசியத் தேவைகளின்றி வெளியேவருபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தும், நூதன முறைகளில் தண்டனைகள் கொடுத்தும் வருகின்றனர். இதனால் ஏராளமானோர் வைரஸ் நோய்க்கு பயப்படுவதை விட காவல்துறையினருக்கு பயந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
வீட்டிலேயே முடங்கி உள்ளதால் பொழுது போக்குக்காக, நாகர்கோவில் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெண்கள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் வானில் பட்டம் விட்டு பொழுதை கழித்து வருகின்றனர். அக்கம் பக்கத்துக்கு வீட்டினருடன் போட்டி போட்டு மொட்டை மாடிகளில் கூட்டம் கூட்டமாக பெண்கள், குழந்தைகள், மற்றும் குடும்பத்தார் பட்டங்களை பல மணி நேரமாக பறக்க விட்டு பொழுதை கழித்து வருகின்றனர்.