கன்னியாகுமரி அருகே மணக்குடி மீனவ கிராமத்தில் மின் கட்டண வசூலில் குளறுபடி காணப்படுவதாகவும், மின் கட்டணம் பத்து மடங்கு வரை உயர்ந்துள்ளதாகவும் மீனவப் பெண்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஏற்கனவே கரோனா தொற்று பீதியினால் மீன்பிடித்தொழில் இன்றி, மீனவ மக்கள் வறுமையில் தவித்துவரும் வேளையில், வழக்கமான மின் கட்டணத்தை விட அதிக கட்டணம் வந்துள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மணக்குடி கிராமத்தில் நவஜீவன் நகரில் கடந்த சில மாதங்களாக பூட்டப்பட்ட நிலையில் உள்ள வீட்டிற்கு மின் கட்டணம் கடந்த பல மாதங்களாக வசூலிக்கப்படவில்லை. ஆனால் தற்போது திடீரென அந்த வீட்டிற்கான மின் கட்டணம் 5 ஆயிரத்து 800 ரூபாய் என மின் ஊழியர்களால் எழுதப்பட்டிருந்தது.
இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மீனவ பெண்கள் அதிர்ச்சி அடைந்ததோடு, தங்கள் வீடுகளிலும் ஏற்கனவே செலுத்தப்பட்டு வந்த மின் கட்டணம் தற்போது பன்மடங்கு உயர்ந்திருப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.