கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் சந்திப்பில் எஸ்பிஐ வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இறச்சகுளம், நாவல்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், பொது மக்கள் வங்கி கணக்கு வைத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த வங்கியில் மாணவ-மாணவியர்களுக்கான கல்வி கடன், மத்திய மாநில அரசுகள் அளிக்கின்ற முத்ரா கடன், தொழில் கடன், விவசாயிகளுக்கான கடன் உள்பட எந்த கடன்களும் கடந்த ஒரு வருட காலமாக வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் கடும் சிரமப்படும் விவசாயிகள், பொதுமக்கள், மாணவ-மாணவியர்கள் அருகில் அமைந்துள்ள தாழக்குடி, பூதப்பாண்டி பகுதியில் உள்ள வங்கிகளை கடனுக்காக நாடி சென்றால், அந்த வங்கி கிளைகள் உங்கள் பகுதியில் அமைந்துள்ள வங்கி கிளையில் தான் கடன் பெற முடியும் என கூறி திருப்பி அனுப்பி விடுவதாக இறச்சகுளம் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படும் கடன் உதவிகளை பெற முடியாமல் தவித்து வருவதாக கூறிய இறச்சகுளம், நாவல்காடு சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள், எஸ்பிஐ வங்கியை முற்றுகையிட்டதோடு, வங்கியின் உள்ளே தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மேலும் வங்கி மேலாளருடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.