தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலுக்குள் காற்றாலை அமைக்க எதிர்ப்பு: போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு! - மத்திய மாநில அரசுகள்

கடலில் காற்றாலைகள் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மீனவ அமைப்புகள், திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தினால் போராட்டம் நடத்த உள்ளதாக எச்சரித்துள்ளன.

காற்றாலை திட்டம்
wind mills

By

Published : Apr 28, 2023, 5:47 PM IST

கடலுக்குள் காற்றாலை அமைக்க எதிர்ப்பு: போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு!

கன்னியாகுமரி: தமிழக கடல் பகுதிகளில் 30 ஆயிரம் மெகா வாட் திறனில் மத்திய அரசு காற்றாலை மின் நிலையம் அமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடி வரை கடலில் 4,000 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையம் அமைக்கத் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதேபோன்று நாகை, ராமேஸ்வரம், தனுஷ்கோடி ஆகிய இடங்களில் கடலில் காற்றாலை அமைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஆதரவு கொடுத்துள்ளதாக மீனவர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத்திட்டத்துக்கு மீனவ சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதை செயல்படுத்தினால் கடல் வளம் பெருமளவு பாதிக்கப்படக் கூடும் என மீனவ அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. இதுகுறித்து நாகர்கோவிலைச் சேர்ந்த தமிழ்நாடு மீன்பிடித் தொழிலாளர் சங்க கூட்டமைப்பின் தலைவர் அந்தோணி கூறுகையில், "தமிழ்நாட்டில் 1,076 கிலோ மீட்டர் நீளத்தில் கடற்கரை பகுதிகள் உள்ளன. இதில் ரூ.30,000 கோடி செலவில் கடலுக்குள் காற்றாலைகள் அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 14 கடலோர மாவட்டங்களில் இந்த திட்டத்தின் மூலம் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள்.

மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தற்கொலை செய்கின்ற நிலை ஏற்படும். எனவே அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும். ஏற்கனவே கடற்கரைகளில் தொழிற்சாலைகளின் கழிவு, நகர்ப்புற கழிவு, அணுசக்தி கழிவு, பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் கடலில் மீன்வளம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காற்றாலைகளை கடலில் அமைக்கும் போது மீனவர்களின் வாழ்வாதாரங்கள் முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.

விஞ்ஞானப் பூர்வமாக மின்சாரம் தயாரிக்க பல வழிகள் இருந்தும் கூட மீனவர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும். சுற்றுப்புறச் சூழலுக்கும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வரைமுறைகளுக்கு எதிராகவும் இத்திட்டம் அமைந்துள்ளது. பாரம்பரிய மீன்பிடித் தொழில் செய்து வரும் மீனவர்கள் மற்றும் மீன்பிடித் தொழில் சார்ந்த பல்வேறு தொழில்கள் செய்து வருபவர்களை அழிக்கும் சூழலை இரண்டு அரசுகளும் செய்து வருகிறது.

இப்படிப்பட்ட திட்டங்களை மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் கைவிட்டு மக்களைப் பாதிக்காத வகையில் மாற்று இடங்களில் நாட்டு மக்களின் நலன் கருதி தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முன்வர வேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு முழுவதும் மீனவ அமைப்புகளை திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம்" என்றார்.

இதையும் படிங்க: மதுரையில் ஒரு கிலோ மல்லிகை ரூ.400க்கு விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details