நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம், அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகினார். பின்னர், கருத்து வேறுபாட்டால் கட்சியிலிருந்து விலகியதாக அவரே தெரிவித்தார்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பள்ளியில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணியை கல்யாணசுந்தரம் தொடக்கி வைத்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் வகுக்கப்பட்ட கோட்பாடு, கொள்கைகளை மீறி கட்சித் தலைமை செயல்படுகிறது. நிர்வாகிகள், தொண்டர்களின் கருத்துக்களை கேட்காமல் கட்சியில் இருந்து ஏராளமானோர் நீக்கப்பட்டு வருகின்றனர்.
அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்கள் எந்தக் கட்சிக்கும் செல்லாமல் தொடர்ந்து தமிழ் தேசியவாதிகளாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட இளைஞர்களின் ஆற்றல் வீணடிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அவர்களை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும் கட்சித் தலைமையை தொடர்பு கொள்ள முடியாமல் உள்ளனர்.