கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (29). இவருடைய மனைவி பவித்ரா (26). நிறை மாத கர்ப்பிணியான இவர், கொட்டாரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், பிரசவத்திற்காக கடந்த 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். நேற்று (ஆகஸ்ட் 10) காலை 7 மணிக்கு பிரசவ வலி எடுத்த பவித்ராவுக்கு பெண்குழந்தை பிறந்தது. ஆனால், சில நிமிடங்களிலேயே பவித்ராவுக்கு அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஆம்புலன்ஸ் மூலம் கன்னியாகுமரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பவித்ராவை பரிசோதித்த மருத்துவர்கள், ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டுச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரசவித்த இளம்பெண் இறந்தது தொடர்பாக கன்னியாகுமரி எம்எல்ஏ ஆஸ்டின் மற்றும் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அப்துல்மன்னா ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண் சார்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று (ஆகஸ்ட் 11) காலை குமரி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஜான் பிரிட்டோ தனியார் மருத்துவமனையை ஆய்வு செய்தார்.