கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 25ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு தொடங்கிய காலம் முதல் தனியார் பேருந்துகள், மினி பேருந்துகள் இயக்க தடை விதிக்கப்பட்டன.
தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. இதனடிப்படையில், அரசு பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வந்தாலும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்படாமல் இருந்துவந்தது.
தற்போது, வெளி மாவட்டங்களுக்கு தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்துகளை சுத்தம் செய்து பயணத்திற்கு தயார் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் குமரி மாவட்டம் நாகர்கோவில் கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தனியார் ஆம்னி பேருந்து நிலையத்தில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் நலனை கருத்தில்கொண்டு பேருந்தின் உள்பகுதியிலும், பேருந்து நிலையங்களில் சுற்றியுள்ள பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர். இன்று மாலை முதல் தனியார் பேருந்துகள் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது.