இதுகுறித்து விவேகானந்தா கேந்திரா நிர்வாக செயலாளர் ஹனுமந்த்ராவ் நிருபர்களிடம் கூறியதாவது :-
"சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் 50ஆம் ஆண்டு பொன் விழா கொண்டாட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி தொடங்கி அடுத்தாண்டு (2020) செப்டம்பர் 2ஆம் தேதிவரை கொண்டாட விவேகானந்தா கேந்திரா நிர்வாகம் முடிவு செய்து, பல்வேறு விழாக்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதற்காக நாளை (25ஆம் தேதி) கன்னியாகுமரிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தடைகிறார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் 2 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். பின்னர் பூம்புகார் படகுத்துறையில் இருந்து தனிப்படகு மூலம் கடலில் உள்ள சுவாமி விவேகானந்தா கேந்திரா நினைவு மண்டபத்திற்கு செல்கிறார். அங்கு தியான மண்டபம், ஸ்ரீபாத மண்டபம், சபா மண்டபம் ஆகியவற்றை பார்வையிடுகிறார்.