கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரத்தில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "தமிழ்நாடு மின்வாரிய துறையில் 50ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான காலி பணியிடங்களை நிரப்பாமல், ஒரு உப கோட்டத்திற்கு 20 பேர் வீதம் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தி மின்வாரிய பணிகளை மேற்கொள்ள மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு மின்வாரிய அமைச்சர் மின்சார துறையை தனியார் மயமாக்க மாட்டோம் என்று கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால், மின் வாரிய தலைவர் மின்வாரிய துறையில் உள்ள பிரிவு பிரிவாக தனியார் மயமாக்கி கொண்டு வருகிறார். காலிப்பணியிடங்கள் அதிகமாக இருப்பதனால் நான்கு பேர் பார்க்க வேண்டிய பணியை ஒரு நபர் பார்த்துக் கொண்டிருக்கிறார்.