கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் பணி புரியும் சில அரசு ஊழியர்கள் பொது மக்களிடம் லஞ்சம் பெறுவதாக அடிக்கடி பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதனால் லஞ்ச ஒழிப்பு துறையினரும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்களது அதிரடி வேட்டையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
மேலும் பத்திரப் பதிவுத்துறை (Registration Offices), கிராம நிர்வாக அலுவலகம் (VAO Offices), வருவாய்த்துறை (Revenue Department) போன்ற இடங்களில் அதிரடியாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்தி பத்திரப் பதிவுத்துறை அதிகாரியை கையும் களவுமாக பிடித்தது மட்டுமல்லாது அவரை கைது செய்து நடவடிக்கையும் மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக ஒரு சில பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகள் வீடுகளிலும் ரகசியமாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெருவிளை பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் மனோகரன். இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராணி என்பவரின் தாயார் நேசம்மாளுக்கு சொந்தமான 2 ஏக்கர் 13 சென்ட் ரப்பர் தோட்டத்தின் பட்டாவை, மனைவியின் பெயருக்கு மாற்ற டேவிட் மனோகர் பொன்மனை கிராம அலுவலகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி மனு அளித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த மனு மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டதாகவும், பின்னர் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ரவி என்பவரிடம் நேரில் சென்று மனு குறித்து டேவிட் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்கு விஏஓ ரவி, மனுதாரர் டேவிட் மனோகரிடம் நிலத்திற்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், ரூ.5000 லஞ்சமாக தர வேண்டும் என கேட்டதாக சொல்லப்படுகிறது.