கன்னியாகுமரி: நாகர்கோவிலில் பாஜக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அமைச்சர் மனோ தங்கராஜ் அலுவலகத்தில் இருந்து தொடர்ந்து கொடுத்து வரும் அழுத்தம் காரணமாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்கள் செயல்பட முடியாமல் திகைத்து வருகின்றனர்.
இந்த மாவட்டத்தில் ஒரு கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. ஒரு அமைச்சர் அலுவலகத்தில் இருந்து அலுவலர்களுக்கு ஏன் அழுத்தம் வர வேண்டும்? இது சம்பந்தமாக நாகர்கோவில் தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர்.காந்தி விரைவில் முதலமைச்சரை நேரடியாக சந்தித்துப் புகார் மனு அளிக்கவுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 52 டவுன் பஞ்சாயத்துக்கும் தலா 52 லட்சம் ரூபாய் மத்திய அரசினுடைய நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து 15 விழுக்காடு கமிஷன் கேட்டு அமைச்சர் அலுவலகத்தில் இருந்து அலுவலர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக குற்றம்சாட்டுகின்றனர்.
தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் கட்டுமான குளறுபடி காரணமாக இதுவரை 27 மீனவர்கள் இறந்துள்ளனர். துறைமுகத்தினை சீரமைப்பதற்காக மத்திய அரசு ஏராளமான நிதியைக்கொடுத்தும் கூட தமிழ்நாடு அரசு பணிகளை செய்ய முன்வராதது ஏன்?
செய்தியாளர்களைச் சந்தித்த பொன். ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தில் கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடி வரைக்கும் பணிகளை முடிக்க மத்திய அரசு 2ஆயிரத்து 600 கோடி ரூபாய் திட்டப்பணிகளை கொடுத்துள்ளது. ஆனால், மாநில அரசு இதுவரை நடைமுறைப்படுத்த காலம் தாழ்த்தி வருகிறது' என்றார்.
இதையும் படிங்க:2ஆவது முறையாக திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின்; கனிமொழிக்கு முக்கிய பதவி