கன்னியாகுமரி:கர்நாடகாவில் எதிர்கட்சிகளின் இரண்டாம் கட்ட ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்று முடிவடைந்தது. இதனிடையே மேகதாது அணை விவகாரம் இருக்கும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் பெங்களூரு சென்றதை கண்டித்து
பாஜகவினர் கருப்பு பேட்ஜ் அணிந்து பேட்டி அளித்தனர்.
அப்போது பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், “காவிரி நீரை எதிர் நோக்கி இருக்கும் காலத்தில், இப்போது இருக்கும் நீரை கூட கட்டுப்படுத்தி மேகதாதுவில் புதிய அணையை கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சர் சித்தாராமையா மற்றும் அதற்கு மூளையாக இருக்கும் டி.கே.சிவகுமார் ஆகியோரது கைகளை குலுக்கிக் கொண்டு, சோனியா காந்தியின் விருந்தில் கலந்து கொண்டுள்ளார்கள். இது வெந்து கொண்டிருக்கும் புண்ணில் ஈட்டியை பாய்ச்சுவதுபோல் உள்ளது.
அன்றைய சென்னை மாகாண பிரிட்டிஷ் அரசாங்கம், அணை கட்டும் நடவடிக்கையை தடுத்துள்ளது. அதன் பிறகும் 1914இல் விசாரணை முடித்து அணை கட்டலாம் என்று சொல்லியும், அணை கட்டும்போது ஒப்பந்தம் ஏற்பட்டு 41 டிஎம்சிக்கு அனுமதி இல்லை என்று கூறி, 11 டிஎம்சிக்கு அணை கட்ட அனுமதி பெற்ற கர்நாடக அரசு, 41 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணை கட்ட திட்டமிட்டு கட்டியதிலிருந்து பிரச்னை ஏற்பட்டது.
1924ஆம் ஆண்டில் இருந்து 50 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆனால், 1971இல் காங்கிரஸ் மற்றும் திமுக சேர்ந்து தேர்தலைச் சந்தித்த பிறகு 1974இல் புதுப்பிக்க வேண்டியது புதுப்பிக்கப்படவில்லை. இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் பலி.
கர்நாடகாவில் இருந்து ஜூலை வரை 12,213 டிஎம்சி தண்ணீர் வர வேண்டிய நிலையில், 2,993 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. இவர்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆலோசனை செய்கிறார்கள். வர வேண்டிய தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வராத நிலையில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறது.