கன்னியாகுமரி:நாகர்கோவிலில் வைத்து பாஜக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய பொன். ராதாகிருஷ்ணன், “கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்புகளில் மிக முக்கியமான ஒன்று, இயற்கை வளம். நாட்டின் தென் கோடியான குமரி மாவட்டம், தமிழ் கூரும் நல் உலகில் சொல்லப்பட்டிருக்கும் ஐவகை நிலங்களில் நான்கு வகையான நிலங்களை உள்ளடக்கிய மாவட்டம். பாலை நிலம் மட்டும் இங்கு கிடையாது. அப்படிப்பட்ட அழகான மாவட்டம்.
மாவட்டத்தின் இயற்கை வளத்தைக் காப்பாற்றுவது இங்குள்ள ஒவ்வொருவரின் கடமை. மிக அத்தியாவசியமான விஷயத்தைத் தவிர, வேறு எந்த காரணத்துக்காகவும் இயற்கை வளங்களை சீண்டி பார்க்கக் கூடாது. துரதிர்ஷ்டவசமாக கன்னியாகுமரி மாவட்ட கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு வருகின்றன.
கன்னியாகுமரி பகுதியில் ஒரு மலை காணாமல் போய் விட்டது. தோட்டியோடு பகுதியில் மலைகள் உடைக்கப்பட்ட நிலையில் நிற்கின்றன. கேரள அரசைப் பாராட்டுகிறேன். கேரள மாநிலத்தில் நிறைய மலைகள், ஆறுகள் உள்ளன. ஆனால், அங்கிருந்து எடுக்க விட மாட்டார்கள். கேரள அரசு மானமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
கேரளாவில் எந்த கட்டுமானப் பணிகளுக்கும் அங்குள்ள மலைகளில் இருந்து கருங்கல் உள்ளிட்ட கனிம வள மூலப் பொருட்களை எடுப்பதில்லை. அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து கனிம வளப் பொருட்களைக் கொண்டு செல்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைகள் உடைக்கப்பட்டு, அரசு மற்றும் அதிகாரிகள் ஆதரவோடு நாள்தோறும் கேரளாவுக்கு 100க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கடத்தப்படுகின்றன.