கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலுக்கு வந்த சகாயம் ஐ.ஏ.எஸ் பேசுகையில், “அரசுப் பணியிடங்களுக்கு தயாராகி வரும் மாணவர்களைச் சந்தித்து, அவர்களுக்கு வழிகாட்டுவது மட்டுமல்ல, எதிர்காலத்தில் நேர்மையான அதிகாரியாக பணியாற்றிட வேண்டும் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
நீட் தேர்வைப் பொறுத்தவரையில், அடிப்படையில் பொதுவான ஒரு தேர்வை நடத்துவதற்கு பொதுவான பாடத்திட்டத்தை படித்தவர்களுக்கு, இந்த தேர்வைச் சந்திப்பது எளிதானது. ஆனால் வெவ்வேறு பாடத்திட்டங்களைப் படித்தவர்கள், இந்தத் தேர்வைச் சந்திப்பது கடினமாகும். குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் இருந்து வரக்கூடிய மாணவர்களுக்கு இது பெரிய பாதகத்தை ஏற்படுத்தும். எனவே, நீட் தேர்வு தேவை இல்லை என்ற தமிழ்நாடு அரசின் நிலைபாட்டை நாங்கள் ஆதரிக்கிறோம்.
இந்தியா என்பது ஒரு ஜனநாயக நாடு. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ளது. இதில் வாக்களிக்கக் கூடிய வாக்காளர்கள் நம்முடைய சாதி, மதத்தைச் சேர்ந்தவர், நம்முடைய ஊர்காரர்கள் என்று பார்க்கக் கூடாது. எந்த வேட்பாளர் நமது தொகுதிக்கு சிறப்பாக செயல்படுவார், ஒரு காலமும் பொதுச்சொத்தை திருட மாட்டார், இயற்கை வளங்களை சூறையாட மாட்டார் என்ற நல்ல மனிதர்களை, நமது பிரதிநிதியாக மக்கள் தேர்ந்தெடுத்து வைக்க வேண்டும். ஒருபோதும் பணத்திற்காக வாக்களிக்கக் கூடிய கயமை செயலில் நாம் ஈடுபடக் கூடாது.