தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் கரோனா சடலம்: பொய்யான செய்தியை பதிவிட்ட நபருக்கு போலீஸ் வலை! - கரோனா தொற்று

கன்னியாகுமரி: ’கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் சடலத்தை சாலையில் வீசி சென்ற அவலம்’ என்ற செய்தியை முகநூலில் பதிவிட்டு காவல் துறையினருக்குப் போக்கு காட்டிய அடையாளம் தெரியத நபரை சைபர் கிரைம் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் பரவிவரும் பொய்யான செய்தி
சமூக வலைதளங்களில் பரவிவரும் பொய்யான செய்தி

By

Published : May 16, 2021, 9:49 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் மே 14ஆம் தேதி முதல் பேஸ்புக், வாட்ஸ் - அப் போன்ற சமூக வலைதளங்களில் பாலித்தீன் உறையால் சுற்றப்பட்ட சடலம் ஒன்று சாலையில் கிடப்பது போலவும், அதை பொதுமக்கள் பார்த்து கொண்டிருப்பது போலவும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் உலா வந்தது.

ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நோயாளியின் சடலத்தை ஊழியர்கள் சாலையில் வீசி சென்ற அவலம் என்றும் வாசகங்களுடன் செய்திகள் உலா வந்தன.

இந்த நிலையில் குளச்சல் ஏ.எஸ்.பி விஸ்வேஷ் சாஸ்த்ரி தலைமையிலான காவல் துறையினர், அதன் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சடலம் குருந்தன்கோடு அருகே வடக்கு ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த 68 வயதான கோபாலன் என்ற கூலி தொழிலாளியின் சடலம் என்பது தெரியவந்தது.

இவர், 40 வருடங்களுக்கு முன்பு மனைவி கைவிட்டுச் சென்ற நிலையில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த மூன்று நாள்களாக வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் வீட்டருகே சென்ற போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் வெள்ளிச்சந்தை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்று காவல் துறையினர் பார்த்தபோது, கோபாலன் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். இதனைத் தொடர்ந்து வருவாய்த் துறை அலுவலர்கள் முன் சடலத்தை காவல்துறையினர் பாலித்தீன் கோணி மூலம் சுற்றி எடுத்தனர்.

பின்னர், உடற்கூராய்வுக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க சாலையில் சடலத்தை வைத்துவிட்டு, அவசர ஊரதியை அழைத்து வர சென்ற நிலையில் அதை புகைப்படம் எடுத்த நபர், பொன் சுரேஷ் பிரசாத் என்ற முகநூல் கணக்கு மூலம் தவறான செய்தியை பரப்பியுள்ளார். இதுவே சமூக ஊடகங்களில் வைரலானது என காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முற்பட்டதாகவும், காவல் துறையினர் போக்கு காட்டி அரசு பணியை செய்ய விடாமல் தடுக்க பொய் செய்தியை வெளியிட்ட அந்த முகநூல் கணக்கு நபரை கண்டுபிடித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் துறையினர் அந்நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கரோனா நோயாளி உயிரிழப்பு: மருத்துவர் உறவினர்களுக்கு இடையே தாக்குதல்

ABOUT THE AUTHOR

...view details