கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குளங்கள், கால்வாய்கள் சிறிய மற்றும் பெரிய ஓடைகள் தூர்வாரப்பட்டு வருகிறது. குறிப்பாக, விவசாயத்துக்குப் பயன்படும் குளங்களை ஆழப்படுத்தும் நோக்கத்தோடு தண்ணீரை வெளியேற்றி தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படி தூர்வாரப்படும்போது அரிய வகையான பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள், கோயில் சிலைகள் கிடைப்பது வழக்கம். ஆனால், கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிபள்ளம் அடுத்த வேம்பனூர் ஊர் பகுதியில் உள்ள குளத்தில் சினிமாக்கள் மற்றும் குழந்தைகள் விளையாட பயன்படுத்தப்படும் 2000 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவிலை அடுத்த ஆசாரிப்பள்ளம் அருகே வேம்பனூர் ஊர் பகுதியில் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் பாசனக்குளம் ஒன்று உள்ளது. அந்தப் பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் அந்த குளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். மோசமான முறையில் புதர் அடைந்து காணப்பட்டதால், பொதுமக்கள் அந்த குளத்தைத் தூர்வாரி சுத்தம் செய்திட அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் அந்த குளத்தினை தூர்வாரும் பணிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து அந்த குளத்தில் தூர் வாரும் பணி நடைபெறவுள்ளது.
முதற்கட்டமாக குளத்திலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குளத்தில் தண்ணீர் வற்றியதை அடுத்து அந்த குளத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் இன்று (ஜூன் 24) மதியம் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, குளத்தின் கரைப் பகுதியில் பிளாஸ்டிக் கவர் ஒன்று கிடந்ததுள்ளது. அதில், ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதைப் பார்த்த அந்த சிறுவர்கள் குளத்தின் கரையில் கிடந்த கவரை எடுத்து கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் கவரை பிரித்துப் பார்த்தபோது கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன.