கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் பகுதியைச் சேர்ந்தவர் காட்வின் டோணி (27). இவர் 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் பணிக்குச் சேர்ந்து நாகர்கோவில் ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றிவந்தார்.
நாகர்கோவில் ஆயுதப்படை பிரிவு பணிக்குச் செல்வதற்காக இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டார். அவர் திருவனந்தபுரம்-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலை புலியூர்குறிச்சி பகுதி அருகே நாகர்கோவில் நோக்கி வந்துகொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது இருசக்கர வாகனம் எதிரே திருச்செந்தூரிலிருந்து களியக்காவிளை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட காவலர் சாலையில் விழுந்ததில் அவரது தலைக்கவசம் சுக்குநூறாக நொறுங்கியது. இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு காட்வின் டோணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.