கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு அடுத்த இடலாக்குடி ரஹ்மத் கார்டன் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ஹமீத் பாதுஷா (45). இவர் நாகர்கோவில் பகுதியிலுள்ள கேக் வேர்ல்ட் என்ற பேக்கரியில் வேலை செய்து வருகிறார்.
இவர் நேற்றிரவு (டிச.28) வேலைக்குச் சென்றுவிட்டு இன்று (டிச.29) காலை வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்ட நிலையில் அதிலிருந்த 20 சவரன் நகைகள், 5 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.
காவல் துறை ஆய்வு:
இதையடுத்து, அவர் உடனடியாக கோட்டாறு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், திருட்டு நடந்த இடத்தை ஆய்வு செய்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையாக, அப்பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் திருட்டு நடந்த வீட்டை நோட்டமிடும் காட்சி பதிவாகியிருந்தது.
சிசிடிவி மூலம் விசாரணை:
இதையடுத்து, அந்த காட்சியின் அடிப்படையில் குற்றவாளிகளை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், வீட்டில் பீரோ சாவி வைக்கும் இடத்தை நன்றாக தெரிந்த யாரோ ஒருவர்தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனத்தில் உலா வரும் நபர்கள் தொடர்ந்து, இது குறித்து காவல் துறையினர் பல கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அமேசான் நிறுவனத்தில் திருடிய ஊழியர்கள் - 5 பேர் மீது வழக்குப்பதிவு