கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த பறக்கை இலந்தவிளை பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் சிவராம பெருமாள் (42) அப்பகுதியில் மருத்துவமனை நடத்திவந்தார். இவர், குமரி கிழக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி மாவட்ட இணை அமைப்பாளராகவும் இருந்தார்.
இவரது மனைவி மருத்துவர் சீதா அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த அக். 26 ஆம் தேதி மருத்துவர் சிவராம பெருமாள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
அவரின், தற்கொலைக்கான காரணம் குறிப்பிட்டு அவர் எழுதிய கடிதம் மற்றும் நண்பர்களிடம் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் எழுதிய கடிதத்தில் கன்னியாகுமரி பாஸ்கரன், இலந்தைவிளையைச் சேர்ந்த விஜய ஆனந்த் ஆகியோர் தான் தனது மரணத்திற்கு காரணம் என்று கூறியிருந்தார்.
குமரி டிஎஸ்பி பாஸ்கரன் சிவராம பெருமாளை அவரது குடும்பத்தினர் முன்னிலையில் அவதூறாகப் பேசியதாக அதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான சிவராம பெருமாள் தற்கொலை செய்துகொண்டார். இதுவே அவர் தற்கொலை செய்ய காரணம் என உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால், டிஎஸ்பி தரப்பில் சிவராம பெருமாள் யார் என்றே தெரியாது எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கண்ணன் என்பவரிடம் சம்பவம் நடைபெற்ற இடத்தில் வரைபடம் தயாரித்து சாட்சியாக கையெழுத்து பெற்ற காவல் துறையினர், அவரிடம் மேலும் ஒரு வெள்ளை பேப்பரில் கையெழுத்துப் போட்டுத் தரவேண்டும் என செல்ஃபோனில் கேட்டுள்ளனர்.