கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் செல்வாகரன். இவர் அதே பகுதியில் சொந்தமாக வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு இரு தினங்களுக்கு முன்பு மொபைல் போனில் அவரது ஆட்டோவின் பதிவெண்ணுடன் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.
அதில், உங்களது TN75AH-8337 என்ற இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணியாமல், சாலை விதிகளை மீறியும் அதி வேகமாகவும், காப்பீடு உள்ளிட்ட எந்த ஆவணங்களுமுமின்றி ஓட்டி வந்ததாக கூறப்பட்டிருந்தது. மேலும், இவரது ஆட்டோ பதிவெண்ணில் குலசேகரம் காவல் துறையினர், ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த குறுந்தகவலின் அடிப்படையில், அவர் இணையதளத்தில் தேடினார். அப்போது அவரது ஆட்டோ எண்ணை இருசக்கர வாகனம் என குறிப்பிட்டு, ஹெல்மட் அணியவில்லை என்பதற்காக அபராதம் விதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது அவருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.