கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் குற்றச் சம்பவ நிகழ்வுகளை பதிவு செய்யவும், மோசடி கும்பல்கள் குறித்தும் சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் முகநூல் பக்கம் ஒன்று தொடங்கப்பட்டது.
இந்த முகநூல் பக்கமானது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக ஊழியர்கள் மூலம் பதிவேற்றப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த முகநூல் பக்கத்தில் சில நாட்களாகவே, காவல் துறை குறித்தும் காவலர்கள் செயல்பாடுகள் குறித்தும் அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
இச்சூழலில் ஒரு வாரத்திற்கு முன் இந்த முகநூல் பக்கமும் முடக்கப்பட்டது. இதனையடுத்து காவல் துறையைச் சேர்ந்த கணினி வல்லுனர்கள், அம்முகநூல் பக்கத்தை மீட்டெடுத்து ஆராய்ந்த போது அந்த பக்கத்தில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டு பக்கத்தை முடக்கியவர்கள் தக்கலையை அடுத்த கோடியூர் பகுதியைச் சேர்ந்த ஜெரூன், வினீஸ், பிரைட் சிங், மார்சியன் ஆன்றணி என்ற நான்கு நபர்கள் என்பது தெரியவந்தது.