கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், தமிழக-கேரள எல்லையை ஒட்டியுள்ள பரக்குன்று பகுதியைச் சேர்ந்தவர், ஜேம்ஸ் (55). இவருக்கு திருமணமாகி ஜெயராணி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். ஜேம்ஸ் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜேம்சின் வீட்டிற்கு அருகில் உள்ள கோயிலில் திருவிழா நடைபெறுவதால், வீட்டில் உள்ள அனைவரும் கோயிலுக்குச் சென்ற நிலையில், ஜேம்ஸ் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனையடுத்து திருவிழாவிற்குச் சென்றவர்கள் வீட்டிற்குத் திரும்பிய நிலையில், ஜேம்ஸ் உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடி கொண்டிருந்துள்ளார்.
இதனால், படுகாயமடைந்த கணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பளுகல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் உதயசூரியன் தலைமையிலான காவல் துறையினர், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஜேம்ஸை கத்தியால் வெட்டி கொலை செய்த மர்ம நபர், மரணம் அடைந்த ஜேம்ஸ் வீட்டிலிருந்து ரூ.3 லட்சம் பணம், ஏழரை சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், கொலை செய்த நபர் அந்தப் பகுதி வழியாக தப்பிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.