கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் ஒரு மாதத்திற்கு முன்பு மனைவிக்காக துணிக்கடை ஒன்றை அமைத்து கொடுத்ததையடுத்து, அதனை அவரது மனைவி நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில், 10 நாட்களுக்கு முன்பு துணி வாங்குவது போன்று ஈசன்தங்கு பகுதியைச் சேர்ந்த ராம்பிரபு (37) கடைக்கு வந்துள்ளார். அன்றைய தினமே, சுப்பிரமணியின் மனைவியிடம் இரட்டை அர்த்த வார்த்தைகளால் பேசியிருக்கிறார். இதனால் அன்று கடையிலிருந்து விரட்டப்பட்ட அவர், விளம்பரப் பலகையிலிருந்து சுப்பிரமணியன் மனைவியின் செல்போன் நம்பரை எடுத்துச் சென்றதோடு அன்று இரவிலிருந்தே தொலைப்பேசி வாயிலாகத் தொடர் பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில் ஆபாச வார்த்தைகளால் பேசி வந்துள்ளார்.
இதனைப் பலமுறை கண்டித்தும் கேட்காத நிலையில், கோட்டாறு காவல் நிலையத்தில் சுப்பிரமணியன் புகார் அளித்துள்ளார். ஆனால், காவல்துறையினர் இது சைபர் குற்றப்பிரிவு காவலர்களால் விசாரிக்கப்பட வேண்டியது என அலட்சியம் காட்டியுள்ளனர். ராம்பிரபு கொடுத்த தொடர் தொல்லைகளால், சுப்பிரமணியனும் அவரது மனைவியும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர்.