கன்னியாகுமரி:கார்த்திகை மாத பௌர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில், ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு கார்த்திகை தீப விழா இன்று (நவ.26) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயில்கள் மற்றும் வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்வார்கள். அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருக்கார்த்திகை தீப விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும்.
இந்த நிலையில், கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விசுவரூப தரிசனம் போன்றவை நடைபெற்றது. பின்னர் இன்று மாலை 4 மணியளவில், குமரி கடல் நடுவே அமைந்து உள்ள சுவாமி விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள பாறையில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் மேல்சாந்தி தனி படகில் சென்று, கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து, இரவு பகவதி அம்மன் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தம் நிகழ்வும் நடைபெறவுள்ளது. சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு, பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. மேலும், நாகர்கோவில் நாகராஜா கோயில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில், வடசேரி கிருஷ்ண சுவாமி கோயில், பறக்கை மதுசூதனப் பெருமாள் கோயில், பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.