சிவப்பு மண்டலங்களான சென்னை, கோவை மற்றும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து, தங்கள் சொந்த ஊரான குமரி மாவட்டத்திற்கு வாகனங்களில் வரும் வெளியூர் மக்களின் எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
குமரி எல்லையான ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில், தடுத்து நிறுத்தப்பட்டு, இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 500 பேரிடம் ரத்தம், சளி மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். பரிசோதனை முடிவுகள் இரண்டு நாட்களில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரிசோதனை நடத்தப்பட்டவர்கள், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். சோதனைச் சாவடி தவிர்த்து, கிளை சாலைகள் வழியாக வெளியூர் மக்கள் குமரி மாவட்டத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து வருவதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று, குமரி மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரோனா தொற்று நோய் பரவுவதைத் தடுப்பதற்காக, ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் உள்ளவர்கள் உண்ண உணவின்றி சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு போட்ட பின்பு, வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்களில் சென்ற வண்ணம் இருந்து வருகின்றனர்.
அதிலும் சென்னை, விழுப்புரம், கடலூர் போன்ற சிவப்பு மண்டலப் பகுதிகளில் கரோனா தொற்று நோய் நாளுக்கு நாள் அதிகரித்து மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனால் இந்த சிவப்பு மண்டலப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், மிக அதிக எண்ணிக்கையில் தங்கள் சொந்த ஊருக்குச் செல்கின்றனர்.
இந்நிலையில் குமரி மாவட்டத்தில் இருந்து சென்னை, விழுப்புரம் போன்ற சிவப்பு மண்டலப் பகுதிகளுக்குச் சென்ற வெளி மாவட்ட மக்களும் கரோனா தொற்று நோய் அச்சம் காரணமாக, மீண்டும் குமரி மாவட்டத்திற்குத் திரும்பி வருகின்றனர்.