கன்னியாகுமரி:19 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் ஆர்ப்பரித்து எழுந்த ஆழிப்பேரலைக்கு பின், இன்று வரை உலகமே டிசம்பர் மாதத்தை கண்டு அச்சப்பட்டு வருகிறது. 2004ஆம் ஆண்டு அதிகாலை வேளையில் இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுக்கு அருகே கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சுனாமியாக உருவெடுத்தது.
இந்த சுனாமியானது இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, மலேசியா உள்ளிட்ட 14 நாடுகளை தாக்கியதில் லட்சக்கணக்காண மக்கள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டனர். குறிப்பாக, தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர கிராமங்களான குளச்சல், கொட்டில்பாடு, மணக்குடி, அழிக்கால், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு கடற்கரை கிராமங்களில் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போயினர். இந்நிலையில், இன்று சுனாமியில் நினைவு தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கிராமங்களில், தங்கள் உறவினர்களை இழந்த மக்கள், அவர்களது கல்லறைகளுக்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.